tamilnadu

img

கொரோனா வைரஸ் போல வலம் வரும் மின்சாரக் கொள்கை - எஸ்.எஸ்.சுப்பிரமணியம்

தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு சந்தையை விரிவாக்கம் செய்ய! 2003 சட்டம் மூலம் மொத்த மின்சார விநியோகத்தை ருக்கு தாரைவார்த்ததை மாற்றி, விரும்பும் லாபம் ஈட்டும் பகுதிகளை மட்டும் தனியார் பிரித்து எடுத்துக்கொள்ள!

உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக!

தனியார் மயமும் உலக மயமும் துவங்கிய நாட்டிலேயே தோல்வியை தழுவியுள்ள போதிலும் இந்திய நாட்டில் தனியார் மயமும் உலக மயமும் பாய்ச்சல் வேகத்தில் அமுல்படுத்த பட்டு வருகின்றது. அதுவும் கொரோனா ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் இந்த நடவடிக்கை நடக்கிறது.

தனியார்மயத்தையும் உலக மயத்தையும் இந்திய மின்துறையில் அமுலாக்கவே ஏற்கனவே இருந்த  சட்டங்களான மின்சார சட்டம் 1910, மின்விநியோக சட்டம் 1948, மின்வாரிய ஒழுங்கு முறை ஆணைய சட்டம் 1998 ஆகியவைகளை அகற்றி ‘மின்சார  சட்டம் 2003’ சட்டமாக்கப்பட்டது.

2020 சட்ட முன்மொழிவின் நோக்கம் என்ன?

இந்தியாவில் நவீன தாராளமயக் கொள்கை அமுலாகத் துவங்கிய பின்னர் மின்சாரம் சமூக பொருளாக இருந்ததை சந்தை பொருளாக்கும்  வகையில் மின்துறை விரிவாக்கம் மூலம் போட்டியை உருவாக்குவது, அனைவருக்கும் மின்சாரக் கட்டண நிர்ணயிப்பை நவீனமயமாக்குவது, அதிகார குவியலாக்கும்  ஒழுங்கு முறை ஆணையம், மேல் முறையீட்டு ஆணையம், நீதிமன்றங்கள் அமைப்பது போன்ற ஷரத்துக்களோடு மின்சார சட்டம் 2003 சட்டமாக்கப்பட்டது.

நாட்டின் நலன், நிலையான பொருதார வளர்ச்சிக்கு உதவும் அடிப்படைக் கட்டமைப்பில் மின்சாரம் மிக முக்கியமான ஒன்றாகும். மின்சார துறையில் அதிக  முதலீடுகளை ஈர்ப்பது, தனியாரை மின்சார  உற்பத்தி, விநியோகம்  போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்த  வைப்பது,  சந்தை விரிவாக்கம் போன்றவை மின்சார சட்டம் 2003 சட்ட ஷரத்துகள் மூலமே நிறைவேறி உள்ளது.

இந்த நிலையல், மின் விநியோக கட்டமைப்பை பயன்படுத்தி லாபம் ஈட்டும் மின் விநியோக பகுதிகளை மட்டும் தனியாரின் ஆதிக்கத்திற்கு கொண்டு செல்வது, அதற்கு ஏற்ப மின் கட்டண கொள்கைகளை வகுப்பது, இவைகளை அமுலாக்கும் போது ஏற்படும் தாவாக்களை தீர்த்து வைப்பது போன்றவைகளுக்கு இப்போதுள்ள  சட்டம்  விதிகளில் மறுசீரமைப்பு  மாற்றங்களை உருவாக்கவே மின்சார சட்ட திருத்தம் 2020 முன் மொழியப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி, விநியோகம் கொள்முதல் போன்றவைகளை ஒட்டி ஏற்படும் ஒப்பந்தங்கள் அமுலாக்கப் போது ஏற்படும் தாவாக்களுக்கு உடனடியாக தீர்வு காணவில்லையானால் வணிக ரீதியாக, பொரு ளாதார ரீதியாக பல பின்னடைவுகள் உருவாகும் என  கற்பனையாக யூகித்து, அதன் அடிப்படையில் இப்போது உள்ள அரசாங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், மின்சார  சட்டம் 2003 இல் சில  அடிப்படையான மாற்றங்களை உள்ளடக்கி மின்சார  சட்ட  திருத்த  மசோத 2020ஐச் சட்டமாக்க அவசர நடவடிக்கையை மேற்க்கொண்டுள்ளனர்.

தனியாரின் வேட்டைக் காடாக...

மின்சார  சட்டம் 2003 ன் நோக்கமே மின்சார உற்பத்தி,  விநியோகம் போன்றவற்றை தனியாரின் லாப வேட்டை காடாக மாற்றுவது என்பதேயாகும்.  இதன் மூலம் மின்சார உற்பத்தியை தனியாரின் ஆதிக்கத்திற்கு  கொண்டு செல்வதில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது. இந்திய நாட்டு மின்நுகர்வோர்களின் உச்ச கட்ட தேவையை தனியார் மின் உற்பத்தி மூலம் மட்டுமே ஈடு செய்யும் அளவிற்கு தனியார் மின் உற்பத்தி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஆபத்தான நிலை ஏற்கனவே உருவாகி உள்ளது.

இந்நிலையில் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு மேலும்  சந்தையை விரிவாக்கும் வகையில் அயல் நாடுகளி லும் அண்டை நாடுகளிலும் மின்சார பரிவர்த்தனையை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையிலான ஷரத்து 2020 திருத்த மசோதவில்  இடம்  பெற்றுள்ளது. இது, சட்டமாக்கப்பட்டால் தனியார் மின் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் மின் உற்பத்தி செய்து,இங்கு உள்ள சுற்று  சூழலை பாழ்படுத்திவிட்டு, அயல் நாடுகளுக்கு மின்சாரத்தை விற்று,  திரை கடலோடி கொள்ளையடிக்கவும் ஏதுவாக அமைந்துவிடும்.

மின் விநியோகத்திலும்...

மேலும், மின்சார  விநியோகம்  என்பது 2003 சட்டம் மூலம் தனியாருக்கு வழங்கப்பட்டாலும், இதுவரை கிராமப்புறம், நகர்புறம், வணிகப்பகுதி, தொழிற்சாலை பகுதி உள்ளிட்ட அனைத்தும் ஒரே கட்டமைப்பாக இருந்தது. இதனால் தனியார் மின் முதலாளிகள் தாங்கள் நினைத்த கொள்ளை லாபத்தை அடைய முடியவில்லை. இதை மாற்றி  மின் விநியோகத்தில் தனியாருக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் பகுதிகளை தேர்ந்தெடுத்து தொழிலில் ஈடுபடும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச் சரத்து சட்டமாக்கப்பட்டால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு  மாநில மின்வாரியம் மின்சாரத்தை  விநியோகிக்கும். அதே இடத்திற்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்களும் மின்சாரத்தை விநியோகம் விநியோகிக்கும். குழப்பமான நிலை உருவாகும். அதாவது விநியோக துணை அனுமதி யாளரின் அனுமதியுடன்  பல உரிமையாளர்கள் மின் விநியோகத்தில் ஈடுபடும் வகையில் சரத்து சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மின் விநியோக த்தில் அரசு மின்வாரியத்தின் வருவாய் வெகுவாக குறைந்து விடும். வருவாய் மிக குறைந்த கிராமப்புறங்களுக்கு மின் விநியோகம், விவசாயிகளுக்கு மின் விநியோகம், இலவச மின்சார பெறுபவர்களுக்கு மின் விநியோகம் என பணிகள் மிகவும் சுருங்கிவிடும். அதற்கேற்ப வருவாய் இழப்புகள் ஏற்படும். 

ஒட்டுமொத்தமாக நாடி நரம்பற்ற, ரத்த ஓட்டம் இல்லாத, சதைகள் அற்ற, எலும்புக் கூடுகளாக அரசு சார்ந்த மின்வாரியங்கள் மாற்றப்படும்.

விநியோக  துணை அனுமதியாளர் மின் விநியோகம் செய்யும் இடத்தையும் மின் நுகர்வோர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதனால் மின்கட்டணத்தை பாக்கி இன்றி செலுத்தும் நகர்ப்புறத்தையும், அங்கு உள்ள மின்நுகர்வேர்களையும்மட்டுமே தேர்வு செய்வார்கள். இந்நிலையில் கிராமப்புற மின்நுகர் வோர்கள், விவசாயிகள், இலவச மின்சாரம் பெறுபவர்கள் ஆகியோர்களுக்கு மின் இணைப்பு வழங்கவே முன்வரமாட்டார்கள்.

வினியோக துணை அனுமதியாளர்கள் மின் விநியோக கட்டமைப்புகளான டிரான்ஸ்பார்மர்கள், துணை மின்நிலையங்கள், பில்லர் பாக்ஸ், மின்சாரத்தை கொண்டு சாதனங்களை பயன்படுத்தி மின் வினியோகம் செய்து அதற்கான கட்டண நிர்ணயம் செய்தல்  மின் பயனீட்டு கணக்கீடு, பண வசூல் போன்றவைகளை செய்து கொள்ளை லாபம் ஈட்டவும் 2020 திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மின் ஒப்பந்த அமுலாக்கல்  ஆணையம்

மின்வாரிய பணிகளை முறைப்படுத்த ஏற்கனவே மின்சார சட்டம் 2003, மின் கொள்கை 2005, மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மைய ஒழுங்கு முறை ஆணையம்,

மேல் முறையீட்டு நீதிமன்றம் போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளுக்கும் மேலாக மின் ஒப்பந்த அமுலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்கும் சரத்து மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. 

மின் ஒப்பந்த அமுலாக்க ஆணையத்தின் பணி, மின்சாரம் வாங்கல். விற்றல்; மின் உற்பத்தியாளரிடம் இருந்து மின்சாரத்தை பெறுபவர்கள் மின்சாரத்தை கொண்டு செல்பவர்களிடையே பிணக்குகள் - தாவாக்கள் - ஒப்பந்தங்கள் அமுலாவதில் ஏற்படும் பிரச்சனைகள்; அதாவது மின்சாரம் கொள்முதல் செய்ய  நீண்ட கால, நடுத்தர கால மற்றும் குறுகிய கால ஒப்பந்தங்கள் போன்றவை ஏற்படும் போது உள்ள விலை, அதற்கு பின் ஏற்படும் மாற்றங்கள், அதை அமுலாக்கும் போது ஏற்படும் பிணக்கை சிவில் நீதி மன்ற அதிகாரத்தோடு தீர்ப்பு வழங்கும் அதிகாரம் படைத்த  அமைப்பாக உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் நோக்கமே மின்வாரியத்திற்கும் தனியார் நிறு வனங்களுக்கும் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைத்து தனியாரின் கொள்ளைக்கு துணை நிற்பதேயாகும் என்பது வெள்ளிடை மலை.

உற்பத்தி  செலவுக்கு ஏற்ப மின் கட்டணம் நிர்ணயம்

தற்போது உற்பத்தி மற்றும் கொள்முதல் செலவு, மின் விநியோக செலவு, மின் இழப்பு , செலுத்தி வரும் வட்டி, இடை மானியம் ஆகியவைகளை கணக்கில் கொண்டு மின்கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதனால் வணிக மின் நுகர்வோர்களும், தொழிலக  மின் நுகர்வோர்கள் கூடுதல் கட்டணமும்; இதர மின்நுகர்வோர்கள் சற்று குறைவான மின் கட்டணமும் செலுத்தும் வாய்ப்பு உள்ளது. இதை மாற்றும் வகையில் இடை மானிய மிகைத்தொகையை குறைப்பது அல்லது  முழுமையாக அகற்றி மின் கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டு சட்டமாக்க முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சட்டமாக்கப்பட்டால் வீட்டு மின் நுகர்வோர்கள் சுமக்க முடியாத கட்டணத்தை செலுத்த வேண்டி வரும். கூடுதல் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் மின்சாரத்தை மறக்க வேண்டிய ஆடம்பர பொருளாக மாறும் இந்தியாவின் தனிமனித மின் நுகர்வு என்பது தற்போதே மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டால் மிகவும் பின்தங்கி உள்ளது. இதனால் மேலும் பல மடங்கு குறைந்து போகும்.

மானியம்

மாநில அரசு யாருக்கும், எந்த பிரிவினருக்கும் மானியம் வழங்கலாம். மானிய தொகையை மின்வாரியத்திற்கு வழங்காமல் அரசே நேரிடையாக மக்க ளுக்கு வழங்கும்; அதனால் மானியங்களை கணக்கில் கொள்ளாமல் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சரத்து இடம் பெற்றுள்ளது. இது சட்டமாக்கப்பட்டால் தற்போது மானியம் பெற்று வரும் வீடு,இலவச விவசாயம், சுய நிதி விவசாயம், இலவச குடிசை,பொது வழிபாட்டு தலங்கள்,விசைத்தறி, கைத்தறி மின் நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

இவ்வளவு மோசமான ஷரத்துகளை சட்டமாக்கி மின் விநியோகத்தை தனியாரின் கொள்ளைக் காடாக மாற்றிடவே இந்த முயற்சிகள்.

 இத்தகைய ஆபத்தான மின்சாரச் சட்டம் 2020, மசோதா தொடர்பாக மத்திய ஒழுங்கு முறை ஆணையம், மத்திய மின்சார தீர்பாயம்,மாநிலஅரசின் எரிசக்தி துறை செயலாளர்கள், மாநில மின்வாரியத்தின் தலைவர்கள், மாநில அரசின் மின் விநியோக,மின் உற்பத்தி மற்றும் தொடரமைப்பு கழகங்களின் தலைவர்கள்  ஆகியோரிடம் மத்திய அரசு 17.04.2020 தேதியிட்டு, 2020 மின் சட்ட திருத்தம் மீது 21 நாள்களில் கருத்து வழங்க வேண்டும் என கேட்டு இருப்பதும் அதன் மீது தமிழக அரசு வேக வேகமாக நடவடிக்கை எடுப்பதும், மத்திய - மாநில அரசுகள் பெரு முதலாளிகளின் கைப்பாவைகள் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.

மக்கள் ஊடரங்கில் கிடக்கும் தருணத்தில், கொரோனா வைரஸ் போல் வலம் வருகின்றன ஆட்சியாளர்களின் கேடுகெட்ட கொள்கைகள். இதை முறியடிப்போம்!
 



 


 

 

;